இறைவன் ஒருநாள் கடை விரித்தான்
இனிய பொருட்களும் நிறைய வைத்தான்
இதயக் கண்ணால் எடுக்கச் சொன்னான்
இனிய கண்ணைப் பறித்து விட்டான்
முன்னால் செய்த பாவம் என்றான்
முழுப் பார்வையைக் குறைத்து விட்டான்
அந்தகன் போல் அலைய விட்டான்
அள்ளிக்கொள் இனிய பொருளை என்றான்.
கண்ணில் நீரைப் பெருக விட்டான்
கருத்தில் கனலைத் தூவி விட்டான்
கவலையில் அறிவை உருக் குலைத்தான்
கடமை யென்று பெயர் கொடுத்தான்
அள்ளஅள்ளக் குறையாது கல்வி என்றான்
அமைதிப் பொருளைத் திறமை என்றான்
அன்பு நலமே பக்தி என்றான்
அன்னைக் குலமே சக்தி என்றான்
அந்த ஆண்டவன் என்னை ஆட்டிவைத்தான்
இதயக் கண்ணுக்கு ஒளி கொடுப்பான்
ஏழைகள் வாழ்வுக்கு மழை கொடுப்பான்
இனிய செயலுக்கு வழி அமைப்பான்
இதயப் புண்ணுக்கும் மருந்திடுவான்
நல்ல செயலுக்கு துணையிருப்பான்
நாவுக்கும் உணர்வுக்கும் நலம்புரிவான்
நன்மை செய்வோருக்கு வரந்தருவான்
நாமும் உணர்ந்தால் அருகிருப்பான்
துன்பத்தை மெல்லத் தீர்த்துவைப்பான்
துறவற வாழ்விற்கும் ஒளிகொடுப்பான்.
* * *
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
ஃஃஃ